குழந்தைகள் சில சமயம் கோபமாகவும், எரிச்சலோடும் பேசுகிறார்களே? – என்ன காரணம்

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை குழந்தைகள் நலமருத்துவர் டாக்டர்.காசி அவர்கள் பதிலளித்துள்ளார்.

குழந்தைகள் சில சமயம் கோபமாகவும், எரிச்சலோடும் பேசுகிறார்களே? சிறு வயதிலேயே ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்.?

குழந்தைகளின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முதல் பொறுப்பு பெற்றோர்கள்தான். ஏனென்றால் அவர்கள்தான் குழந்தைகளுக்கு முன்மாதிரி. இதுதான் உலக நியதியும்கூட. முதலில் அம்மாவும், அப்பாவும் தான். பிறகுதான் இந்த சமூகம் எல்லாம்.

குழந்தைகள் இப்படி நடந்து கொள்வது பெற்றோர்களைப் பார்த்துத்தான். குழந்தைகள் முன்பாகவே பெற்றோர்கள் சண்டைபோட்டுக் கொண்டால் அது அவர்கள் மனதில் பதிந்துவிடும். சாப்பாட்டில் உப்பு குறைவு அல்லது அதிகம் என்பதற்காக அப்பா சாப்பாட்டுத் தட்டை தூக்கி எறிந்தால் குழந்தையும் ஒருநாள் இதையே செய்யும்.

கூட்டுக் குடும்பங்கள் மறந்து தனிக் குடும்பங்கள் அதிகமாவதாலும், குழந்தைகளை கவனிப்பது, கண்டிப்பது, தட்டிக் கொடுப்பது போன்றவையும், அதிகமாக செல்லம் கொடுப்பது, எதை கேட்டாலும் வாங்கிக் கொடுப்பது போன்றவையும் தற்போது அதிகரித்துள்ளது.

குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதும் தவறு, எதையுமே வாங்கிக் கொடுக்காமல் இருப்பதும் தவறு. அடம் பிடித்து அழுவதால் எல்லாம் நமக்கு கிடைத்துவிடும் என்ற சிந்தனை குழந்தைக்கு வந்துவிட்டால் அவ்வளவு தான். எது தேவையோ அதை வாங்கிக் கொடுங்கள். அடம் பிடித்து அழுது புரண்டால் ஒன்று புரியவையுங்கள் அல்லது புறக்கணியுங்கள்.

புரதச் சத்து குழந்தைக்கு அதிகம் தேவை என்பதற்காக கடையில் விற்கும் ஊட்டச்சத்து மாவு வாங்கிக்கொடுக்கலாமா?-ரமேஷ், காரைக்குடி 

தேவையில்லை. இயற்கையாகவே நாம் கொடுக்கும் உணவில் சிலவற்றை சேர்த்து கொடுத்தாலே போதுமானது. பொட்டுக் கடலை, சுண்டல், பயிறு வகைகள், பச்சைப் பயிறு, பருப்பு வகைகள் சற்று அதிகமாக குழந்தைகளின் உணவில் சேர்த்தாலே போதுமான புரதச்சத்து கிடைத்து விடும்.

என் குழந்தை ஒழுங்காக சாப்பிட மாட்டேங்குது டாக்டர் என்று பலபேர் வருகின்றனர். அவர்களிடம் கவலைப்படாதீர்கள், குழந்தைக்கு முட்டையும், கீரையும் கொடுங்கள் என்று சொன்னால், இல்ல டாக்டர் ஏதாவது டானிக் கொடுங்கள் என்கின்றனர். இயற்கையாகவே உணவில் சிலவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தாலே அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளமுடியும். டானிக்கும் வேண்டாம், எந்த ஹெல்த் பவுடரும் வேண்டாம்.

குழந்தை சோர்வாக இருக்கிறது. எது கொடுத்தாலும் சரியாக சாப்பிடுவதில்லை என்ன செய்வது?-ஜெயா, செங்கோட்டை

கிராமத்தில் “வேண்டா பிள்ளைக்கு வெல்லம் கொடு” என்பார்கள். இது வேண்டாத பிள்ளைக்கு கொடு என்று அர்த்தம் அல்ல. எதை கொடுத்தாலும் சாப்பிடாமல் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லும் பிள்ளைக்கு வெல்லம் கொடு என்று அர்த்தம்.

வெல்லத்தில் இரும்புச் சத்து உள்ளது. பொதுவாக யாராவது சோர்வாக காணப்பட்டால் அவர்கள் இரத்தச் சோகையோடு இருக்கிறார்கள் என்று கொள்ளமுடியும். இது இரும்புச் சத்து குறைவாக உள்ளதின் வெளிப்பாடு. எனவே புரதம் அதிகம் உள்ள பொட்டுக் கடலை, வேர்க்கடலை, வெல்லத்தோடு பொட்டுக் கடலை உருண்டையாகவும், வேர்க்கடலை உருண்டையாகவும், பொரி உருண்டையாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது இரத்தத்தில் ஹீமோகுளோபினை உயர்த்தி இரத்தச் சோகையை குறைக்கும்.

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com