சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் பயணம்
- Webmaster
- September 16, 2014
- அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இஸ்லாம்
- 0 Comments
உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,015 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 226 பெண்கள் உள்பட 450 பேர் சென்றனர்.
புனித ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரகீம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன்உசேன், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபூபக்கர் ஆகியோர் சால்வைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதில் தமிழக அரசு செயலாளர்கள் முகமது நஜிமுத்தீன், அருள்மொழி, காயிதே மில்லத் விழாக்குழுத்தலைவர் வீரை கரீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை விமானநிலையத்தில் ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
4-வது நுழைவு வாயில் ஹஜ் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் விமான நிலைய ஆணையகம், விமான நிலைய போலீசார், சுங்க இலாகா, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, குடியுரிமை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தனியாக கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புனித ஹஜ் பயணம் சிறப்பாக அமைய முதல்-அமைச்சர் சார்பில் வழியனுப்ப வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். ஹஜ் பயணிகளுக்காக முதல்-அமைச்சர் ரூ.62 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளார். ஹஜ் பயணிகளின் பயணம் சிரமம் இன்றி இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர் கூறும்போது, ‘தமிழகத்தில் இஸ்லாமிய மக்கள் புனித ஹஜ் பயணத்திற்கு செல்ல தகுந்த உதவிகளை செய்து தந்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய-மாநில அரசின் உதவியுடன் இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் முதல்முறையாக புனித ஹஜ் பயணிகள் மதினாவில் தங்கும் 8 நாட்கள் 3 வேளையும் உணவுகள் வழங்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் இந்த பணி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து செல்லும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கும் உணவு வழங்கப்பட உள்ளது. இதற்காக நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.
Source: MalaiMalar
This Post Has 0 Comments