தங்க மண்ணில் ஜொலிக்குமா இந்தியா: இன்று தென் ஆப்ரிக்காவுடன் முதல் மோதல்

ஜோகனஸ்பர்க்:இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது.

பெரும் சர்ச்சைகளை கடந்து தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது. ஜோகனஸ்பர்க் நகரை பொறுத்தவரை தங்கம், வைர சுரங்கங்கள் அதிகம். இந்த தங்க மண்ணில் இந்தியா பிராகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தல் ஆரம்பம்:

இத்தொடரை இந்திய அணியின் வலுவான “பேட்டிங்கிற்கும் தென் ஆப்ரிக்காவின் பலமான “பவுலிங்கிற்கும் இடையிலான போட்டியாக கருதப்படுகிறது. தொடர்ந்து ஆறு ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய உற்சாகத்தில் களமிறங்கும் இந்திய அணிக்கு, வழக்கம் போல் “பேட்டிங் தான் பலம். நடப்பு ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ள துவக்க வீரர்களான ஷிகர் தவான், ரோகித் சர்மா அசத்தலான அடித்தளம் அமைக்கலாம்.

தோனி நம்பிக்கை:

இந்த ஆண்டில் “ரன் மெஷினாக தன்னை அடையாளம் காட்டிய விராத் கோஹ்லியின் விஸ்வரூப ஆட்டம் தொடரலாம். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பெரிய அளவில் சோபிக்காத ரெய்னா, யுவராஜ் சிங், எழுச்சி பெற வேண்டும். இவர்களுடன் “பினிஷிங் மன்னன் கேப்டன் தோனி, நல்ல “பார்மில் இருப்பது கூடுதல் பலம். ரவிந்திர ஜடேஜா ரன்கள் சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஷமி நம்பிக்கை:

தென் ஆப்ரிக்க ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் எழுச்சி பெறுவார்கள் என நம்பலாம். “சுழலில் ஜடேஜா, அஷ்வின் கைகொடுக்கலாம்.

மீண்டும் காலிஸ்:

தென் ஆப்ரிக்காவுக்கு குயிண்டன், ஆம்லா பொறுப்பான துவக்கம் அளிப்பது அவசியம். நீண்ட இடைவேளைக்கு பின் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ள “ஆல்-ரவுண்டர் காலிஸ், நிலைத்து ஆட முயற்சிக்க வேண்டும். கேப்டன் டிவிலியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை தொடர்வது அவசியம். கடைசி நேரத்தில் மில்லர், டுமினி அதிரடியாக ரன்கள் சேர்க்கலாம்.

ஸ்டைன் மிரட்டல்:

வேகப்பந்து வீச்சில் ஸ்டைன் தலைமையில் பிலாண்டர், மார்னே மார்கல், பார்னல் உள்ளிட்டோர் இந்திய அணிக்கு தொல்லைதர காத்திருக்கின்றனர். இம்ரான் தாகிர் “சுழலில் கைகொடுக்கலாம்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை பறிகொடுத்த தென் ஆப்ரிக்க அணி, “நம்பர்-1 இந்தியாவை வீழ்த்தி, இழந்த பெருமையை மீட்க போராடும். அதே நேரத்தில் “உலக சாம்பியன் இந்தியா ஒரு “இன்ச் கூட விட்டுக்கொடுக்காது என்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

புறப்பட்டார் ஜாகிர்

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர், வரும் 18ம் தேதி ஜோகனஸ்பர்க்கில் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களான சீனியர் ஜாகிர் கான், புஜாரா, முரளி விஜய், சகா, அமித் மிஸ்ரா ஆகியோர் நேற்று தென் ஆப்ரிக்காவுக்கு புறப்பட்டனர். ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் கிளம்பிய இவர்கள் 5 பேருக்கும், “விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

சவாலான ஆடுகளம்

இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,””பந்துகள் எகிறும் தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள், மந்தமான இந்திய ஆடுகளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இத்தொடர் கடும் சவாலானதாக இருக்கும். இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு கற்றுக் கொள்வதற்கு இத்தொடர் மிகச் சிறந்த வாய்ப்பு. இதை அவர்கள் சரியாக பயன் படுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன், என்றார்.

மழை வருமா

போட்டி நடக்கும் ஜோகனஸ்பர்க்கில், இன்று காலை மற்றும் இரவில் இடியுடன் கூடிய மழை வருவதற்கு 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

இதுவரை…

ஜோகனஸ்பர்க் மைதானத்தில் இரு அணிகளும் 4 போட்டியில் மோதியுள்ளன. இதில் தென் ஆப்ரிக்கா 2 போட்டியிலும், இந்திய அணி 1 போட்டியிலும் வென்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது.

* கடைசியாக இம்மைதானத்தில் கடந்த 2011ல் நடந்த போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

நிறம் மாறும் வீரர்கள்

தென் ஆப்ரிக்க வீரர்கள் வழக்கமாக பச்சை நிற சீருடையில், போட்டிகளில் பங்கேற்பர். இன்று தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு சார்பில் “பின்க் டே என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்பக கேன்சருக்கான விழிப்புணர்வை தூண்டும் வகையில், இந்த அணி வீரர்கள் இளஞ்சிகப்பு நிறத்தினாலான, சீருடை அணிந்து விளையாடவுள்ளனர்.

வழக்கத்துக்கு மாறானது

தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் கூறுகையில்,”” இப்போது தான் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தோம். இதனால், மனதளவில் சற்று பலவீனம் தான். முதன் முறையாக இப்படி ஒரு நெருக்கடியில் விளையாடுவது, எங்களைப் பொறுத்தவரையில் வழக்கத்துக்கு மாறானது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, துணைக்கண்டத்து அணிகள் எங்கள் மண்ணில் சொதப்பித் தான் வந்துள்ளன. இதனால், உலகின் “நம்பர்-1 அணி இந்தியாவை வீழ்த்த முடியும் என்று <உறுதியாக நம்புகிறோம், என்றார்.

சாதனைக்கு தேவை ஒன்று

சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், அதிக போட்டிகளில் பங்கேற்ற அணிகள் வரிசையில், இந்தியா (841), ஆஸ்திரேலியா (825) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன. இந்த அணிகள் இதுவரை நடந்த ஒட்டுமொத்த போட்டிகளில் தலா 1,82,881 ரன்கள் எடுத்து, முதலிடத்தில் உள்ளன.

இன்று ஜோகனஸ்பர்க் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் எடுக்கும் பட்சத்தில், ஒருநாள் அரங்கில் அதிக ரன் எடுத்த அணி என்ற புதிய சாதனை படைக்கலாம்.

யார் ஆதிக்கம்

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் 68வது முறையாக ஒருநாள் போட்டியில் மோத உள்ளன. முன்னதாக விளையாடிய 67 போட்டிகளில் இந்தியா 25, தென் ஆப்ரிக்கா 40ல் வென்றன. இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை.

* தென் ஆப்ரிக்க மண்ணில், இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் 16 ஒருநாள் போட்டியில் மோதின. இதில் இந்தியா 4, தென் ஆப்ரிக்கா 12ல் வெற்றி பெற்றன.

* இரண்டு அணிகள் மட்டும் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணி நான்காவது முறையாக தென் ஆப்ரிக்கா சென்றுள்ளது. முன்னதாக மூன்று முறை (1992, 2006, 2010) சென்ற இந்திய அணி, ஒருமுறை கூட தொடரை கைப்பற்றவில்லை.

This Post Has 0 Comments

Leave A Reply