ரூ.12.5 கோடியில் தோனி: டாப்-5 வீரர்கள் விவரம் வெளியீடு

புதுடில்லி: ஏழாவது பிரிமியர் தொடருக்கான சென்னை அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகிய ஐந்து வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். தோனிக்கு ரூ. 12.5 கோடி சம்பளம் கிடைக்கும். மும்பை, ராஜஸ்தான் அணிகளும் 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன.
இந்தியன் பிரிமியர் லீக் நிர்வாகத்தின் சார்பில், பிரிமியர் ‘டுவென்டி–20’ போட்டிகள், கடந்த 2008 முதல் நடக்கின்றன. இந்த ஆண்டு ஏழாவது தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவுள்ளன. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்., 12, 13ல் நடக்கும்.

இந்த ஏலம் முழுமையாக நடக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் ஏதாவது ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்றவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு நேற்று தான் கடைசி நாள். இதையடுத்து, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் வைத்துக் கொண்ட வீரர்கள் விவரத்தை வெளியிட்டன.
இதன் படி, சென்னை அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, ரெய்னா, அஷ்வின் மற்றும் டுவைன் பிராவோ என, ஐந்து பேர் நீடிக்கின்றனர். ‘டாப்–-1’ இடம் பெற்ற தோனிக்கு, இப்போது பெறும் ரூ. 8.6 கோடியுடன் கூடுதலாக ரூ. 3.9 கோடி கிடைக்கும். மொத்தம் ரூ. 12.5 கோடி பெறுவார்.
அணியின் 2, 3 மற்றும் 4, 5 வது வரிசையில் யார் உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. விதிமுறைப்படி, இரண்டாவது வீரருக்கு ரூ. 9.5 கோடி, மூன்றாவது ரூ. 7.5 கோடி, நான்காவது ரூ. 5.5 கோடி மற்றும் ஐந்தாவது வீரருக்கு ரூ. 4 கோடி தரப்படும்.

மீதம் எவ்வளவு:
ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ. 60 கோடி செலவிடலாம். இதில் 16 முதல் 27 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். சென்னை அணியை பொறுத்தவரையில் முதல் 5 வீரர்களுக்கு ரூ. 39 கோடி போக, மீதமுள்ள 21 கோடியில், 11 முதல் 22 வீரர்கள் வரை வாங்க வேண்டும்.

விஜய் எப்படி:
சென்னை அணி 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டதால், ஒரு ‘ஜோக்கர் கார்டை’ மட்டும் பயன்படுத்த முடியும். இதனால், முரளி விஜய், பத்ரிநாத், கடந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த மைக் ஹசி, ஆல்பி மார்கல், டுபிளசி போன்றவர்களில் யாராவது ஒருவர், மீண்டும் உறுதியாக அணிக்கு திரும்பலாம்.

ஜான்சனுக்கு ‘ஷாக்’:
மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, போலார்டு, மலிங்கா, தினேஷ் கார்த்திக் மற்றும் அம்பதி ராயுடுவை தக்கவைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்சல் ஜான்சன், அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இவரை ‘ஜோக்கர் கார்டு’ மூலம் மீண்டும் மும்பை அணி வாங்கும் எனத் தெரிகிறது.
சஞ்சுவுக்கு லாபம்:
ராஜஸ்தான் அணியில் டிராவிட்டுக்குப் பின் வாட்சன் தான் கேப்டன் என்பதால், இவருடன் ரகானே, சஞ்சு சாம்சன், பால்க்னர் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி என, ஐந்து பேர்கள் தக்கவைக்கப்பட்டனர். இதில் 19 வயது வீரர் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால், இவருக்கு ரூ. 4 கோடி மட்டும் கிடைக்கும்.

பாவம் சேவக்:
டில்லி அணியின் சேவக், வார்னர், ஜெயவர்தனா உள்ளிட்ட வீரர்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டனர், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ்டன் தலைமையில், இம்முறை டில்லி அணி முற்றிலும் மாற்றியமைக்கப்படுகிறது. இதனால், சேவக் ஏலத்தில் விலை போவது சிக்கல் தான்.

‘ ஜோக்கர் கார்டு’ அறிமுகம்
இம்முறை 7வது பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளில் ‘ஜோக்கர் கார்டு’ முறையும் ஒன்று. ஒரு அணி அதிகபட்சமாக 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொள்ள முடியும். தேவைப்படும் பட்சத்தில், ‘ஜோக்கர் கார்டு’ முறையில் கூடுதலாக ஒரு வீரரை தேர்வு செய்யலாம். ஏலத்தின் போது மட்டுமே அந்த வீரரை தக்கவைத்துக் கொள்ள முடியும். மற்ற அணிகளால் ஏலத்தில் எவ்வளவு தொகைக்கு கேட்கப்பட்டாரோ, அந்த தொகைக்கு அந்த வீரரை வாங்கிக் கொள்ள முடியும்.
உதாரணமாக, சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு வீரரை ‘ஜோக்கர் கார்டு’ முறையில் தேர்வு செய்ய விரும்பினால், அந்த வீரரை ஏலத்தில் மற்ற அணிகள் எவ்வளவு தொகைக்கு கேட்கிறதோ, அந்த விலையை கொடுத்து, சென்னை அணி தக்கவைத்துக் கொள்ள முடியும்.

* ஒரு அணி, அதிகபட்சமாக மூன்று வீரர்களை ‘ஜோக்கர் கார்டு’ முறையில் தேர்வு செய்யலாம். ஆனால் இது, அவர்கள் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. அதாவது 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் அணி ஒரே ஒரு வீரரை மட்டும் ‘ஜோக்கர் கார்டு’ முறையில் தேர்வு செய்யலாம். ஒன்று அல்லது இரண்டு வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டால், 2 வீரர்களை ‘ஜோக்கர் கார்டு’ முறையில் தேர்வு செய்யலாம். எந்த ஒரு வீரரையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை என்றால், 3 வீரர்களை ‘ஜோக்கர் கார்டு’ முறையில் தேர்வு செய்யலாம்.

பாக்ஸ்
பறிபோகும் சுதந்திரம்
கடந்த தொடரில் ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், அங்கின் சவான், சண்டிலா உள்ளிட்ட வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கினர். இதனால் தானோ, என்னவோ, இந்த அணியில் நீடிக்க இளம் வீரர் ரகானேவுக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. தவிர, டிராவிட்டும் ஆலோசகராகத் தான் உள்ளார்.
இருப்பினும், ஏலம் என்று வந்து விட்டதால், அடிமாடு போலத் தான். ரகானேவுக்கு விருப்பம் இல்லை என்றாலும், அணி நிர்வாகம் இவரை தக்கவைத்துக் கொண்டது. ஒருவேளை, இவர் வெளியேறி இருந்தாலும், ‘ஜோக்கர் கார்டு’ மூலம், ராஜஸ்தான் அணி மீண்டும் வாங்கி விடும். விருப்பம் இல்லை என்றாலும், இந்த அணியில் தான் குப்பை கொட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார். மொத்தத்தில் வீரர்களின் சுதந்திரம் பறிபோனது தான் மிச்சம்.

எப்போதும் சென்னை தான்
பிரிமியர் தொடரில் வெற்றிகரமான அணி சென்னை தான். 2010, 2011 ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி, 2010ல் சாம்பியன்ஸ் லீக் தொடரையும் வென்றது. மொத்தம் நடந்த 6 தொடரில், 5 முறை பைனலுக்கு முன்னேறியது.

இதற்கு கேப்டன் தோனி உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் தொடர்ந்து சென்னை அணியில் விளையாடியது தான் முக்கிய காரணம். தோனி, ரெய்னா, அஷ்வின் ஆகிய மூவரும் கடந்த 2008 முதல், இப்போது வரை சென்னை அணியில் தான் விளையாடுகின்றனர்.

பிரிமியர் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் <உள்ள ரெய்னா (99 போட்டி, 2802 ரன்கள்), இதுவரை சென்னை பங்கேற்ற அனைத்து போட்டியிலும் விளையாடியுள்ளார். தவிர, 2012ல் ரூ. 10.66 கோடிக்கு வாங்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா, கடந்த தொடரில் அதிக விக்கெட் (32) சாய்த்த டுவைன் பிராவோவும் சென்னை அணியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டனர். இதனால் தான், இந்த வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். யார் யாருக்கு ‘கல்தா’
அணி விடுவிக்கப்பட்ட முக்கிய வீரர்கள்

சென்னை முரளி விஜய், மைக் ஹசி, ஆல்பி மார்கல், டுபிளசி

மும்பை மிட்சல் ஜான்சன், மேக்ஸ்வெல், பாண்டிங், பிரக்யான் ஓஜா

ராஜஸ்தான் கெவான் கூப்பர், பெரேரா, பிரவிண் டாம்பே

பஞ்சாப் ஷான் மார்ஷ், கில்கிறிஸ்ட், டேவிட் ஹசி, பியுஸ் சாவ்லா

கோல்கட்டா யூசுப் பதான், காலிஸ், மார்கன், பிரண்டன் மெக்கலம், பிரட் லீ, முகமது ஷமி

பெங்களூரு ஜாகிர் கான், தில்ஷன், புஜாரா, வினய் குமார், ராம்பால், முரளிதரன்

டில்லி சேவக், வார்னர், ஜெயவர்தனா, இர்பான் பதான், மார்னே மார்கல

This Post Has 0 Comments

Leave A Reply