ஹஜ் பயணிகளின் சிரமத்தை குறைத்து ஜம்ஜம் புனித நீர் வழங்க புதிய ஏற்பாடு

மக்காவில் உள்ள ஜம்ஜம் நீரூற்று உருவான விதம் பற்றி சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்ராஹீம் நபி காலத்தில் நிகழ்ந்த ஒரு அதிசயத்தை இஸ்லாமியர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றனர்.

’இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள்.

குடிக்க தண்ணீரின்றி தாகத்தில் தத்தளித்த குழந்தை இஸ்மாயில், தன் பிஞ்சுக்கால்களை தரையில் உதைத்து அழுதபோது அந்தஇடத்தில் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அதை வழிந்தோடவிடாமல் சுற்றிலும் மேடெழுப்பிய ஹாஜர் அம்மையார் நீரை தேக்கி வைத்தார்கள்.

அதுவே ‘ஜம்ஜம்’ கிணறு என்று அழைக்கப்படுகிறது. ஜம்,ஜம்’ என்றால் ’நில்,நில்’ என்று அர்த்தம்.’ என்று அவர்கள் கூறுகின்றனர்.

18 அடி அகலமும் 14 அடி நீளமும் 5 அடி ஆழமும் கொண்ட இந்தக் கிணறு, இன்றளவும் மாபெரும் அற்புதமாக திகழ்கிறது.

மின்சார மோட்டார் மூலம் ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர் இறைக்கப்படுவதாகவும் மணிக்கு 2 கோடியே 880 லட்சம் லிட்டர்கள். மாதந்தோறும் 2073 கோடியே 60 லட்சம் லிட்டர்கள் இறைக்கப்படுவதாகவும் கூறப்படும் ஜம்ஜம் கிணற்றின் ஒரு லிட்டர் நீரில் 133.00மி.லி.சோடியம், 096.00மி.லி.கால்சியம், 038.80மி.லி.மேக்கனிசியம், 000-77மி.லி.புளோரைட்,043.03மி.லி.பொட்டாசியம், 124.08மி.லி.நைட்ரேட், 124.00மி.லி.டைகார்ப்நெட், 124.00மி.லி.சல்ஃபேட் ஆகிய தாதுப் பொருட்கள் நிரம்பியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தீராத வியாதிகள் மற்றும் வலிகளுக்கு இந்த நீரின் சில மிடறுகளை பக்தியுடன் பருகியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் இன்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அதுமட்டுமின்றி, இறந்த பிறகு, இஸ்லாமியர்களின் பிரேதத்தை கழுவி, குளிப்பாட்டிய பின்னர், மேனியின் மீது போர்த்தப்படும் ’கஃபன்’ என்ற வெள்ளாடையின் மீது சில துளி ஜம்ஜம் நீரினை தெளித்து அடக்கம் செய்வதை ‘சுன்னத்’ (நன்மை) என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.

ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 இலட்சம் மக்கள் மக்காவில் குழுமுகிறார்கள். அனைவருக்கும் ஜம்ஜம் கிணற்றிலிருந்துதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் இந்த புனித தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

இவ்வகையில், இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ’ஹஜ்’ யாத்திரைக்கு செல்லும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஹாஜிகளாகி திரும்பிவரும் போது, தவறாமல் இந்த ஜம்ஜம் நீரையும் உடன் கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் யாத்திரைக்கு செல்லும் ஒரு லட்சத்து 20 பேர்களுக்கும் தலா 5 லிட்டர் ஜம்ஜம் நீரினை, அவர்களே சுமந்து வரும் சிரமமின்றி இந்தியாவுக்கு கொண்டுவர சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் இந்திய ஹஜ் கமிட்டியிடம் ஒப்பந்தம் செய்துள்ளன.

அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகவே பதப்படுத்தப்பட்ட 5 லிட்டர் ஜம்ஜம் நீர் அடங்கிய கேன்கள் ஜெட்டாவில் காத்திருக்கும் விமானத்தில் ஏற்றப்பட்டு, இந்தியாவில் அவர்கள் இறங்கும் விமான நிலையங்களில் அமைக்கப்படும் சிறப்பு கவுண்ட்டர்களின் மூலம் அவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தங்களது இதர பொருட்களுடன் ஜம்ஜம் நீரையும் சுமந்து வந்து ஹஜ் பயனிகள் சிரமப்பட வேண்டியதில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Malaimalar

This Post Has 0 Comments

Leave A Reply